ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்த கிஷிடாவிற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதைதொடர்ந்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் இரு நாடுகளும் உக்ரைன் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் பிரதமர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் பிரதமரின் இரண்டு நாள் புதுடெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக கிஷிடா இந்தியா பயணம் செய்துள்ளார். இந்திய ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியா வந்துள்ளார்.
முன்னதாக, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே 2016 ஆம் ஆண்டு தனது இந்திய பயணத்தின் போது ஐந்து ஆண்டுகளில் 3.5 டிரில்லியன் யென் முதலீடு மற்றும் நிதியுதவியை அறிவித்தார். ஜப்பான் இந்தியாவில் உள்ள நகரங்களின் வளர்ச்சி மற்றும் அதன் சொந்த புல்லட் ரயில் திட்டம், அதிவேக ரயில் சேவைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.