• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

கட்டப்பனைக்கு பஸ் இயக்காததால் தோட்டத்தொழிலாளர்கள் அவதி

தோட்டத்தொழிலாளர்கள் செல்லும் கட்டப்பனைக்கு பஸ் இயக்காததால் அவதியடைந்தனர். அதிக பணம் கொடுத்து ஜீப்புகளில் சென்றதால் தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கட்டப்பனைக்கு நேற்று தமிழக அரசு பஸ் இயக்காததால், தோட்டத்தொழிலாளர்கள் அவதியடைந்தனர். மேலும் அதிக பணம் கொடுத்து ஜீப்புகளில் சென்றதால் போக்குவரத்து துறைமீது அதிருப்தி தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கம்பம் கிளை 1&லிருந்து கட்டப்பனை, நெடுங்கண்டம், மேட்டுக்குழி, சாஸ்தாநடை பகுதிக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கேரளமாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலம், மிளகு, காப்பி தோட்டங்களுக்கு கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதியிலிருந்து வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு இந்த பஸ்கள் மிக உதவியாக இருந்தது. இதில் கம்பத்தில் இருந்து கட்டப்பனைக்கு அதிகாலை 4.00 மணி, காலை 5.45 மணி, 07.00 மணி, 10.00 மணி, மதியம் 12.30 மணி, மாலை 5.00 மணிக்கும் பஸ் இயக்கப்படுகிறது. கம்பம்மெட்டு, தொழு, புளியன்மலை, புற்றடி, வண்டன்மேடு பகுதியளிலுள்ள ஏலத்தோட்டங்களுக்குச்செல்லும் தமிழக தோட்டத்தொழிலாளர்களுக்கு இந்த பஸ் மிகவும் உதவியாக இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை 5.45 மணிக்கு கட்டப்பனை செல்லும் பஸ்சுக்காக தோட்டத்தொழிலாளர்கள் காத்திடிந்தனர். ஆனால் நீண்டநேரமாகியும் பஸ் வரவில்லை. இதனால் அரசு பஸ்சுக்காக காத்திருந்த தொழிலாளர்கள் விரக்தியடைந்து பின் அதிக கட்டணம் கொடுத்து தனியார் ஜீப்புகளில் கிளம்பிச்சென்றனர். இதுகுறித்து தோட்டத்தொழிலாளர்கள் கூறுகையில், காலையில் தோட்டத்தொழிலாளர்கள் கேரளாவுக்கு செல்லவதற்கு மிகவும் பயனுடையதாக உள்ள இந்த கட்டப்பனை பஸ் அடிக்கடி காலைநேரங்களில் வருவதில்லை. பஸ்நிலையத்தில் கேட்டால் ஆட்கள் பற்றாக்குறை அல்லது வண்டிவேலை என்று ஏதாவது காரணம் கூறுகின்றனர். இதனால் அதிக பணம்கொடுத்து தனியார் ஜீப்புகளில் செல்லவேண்டி உள்ளது.
முறையாக வண்டி இயக்காத போக்குவரத்து துறைமீது தொழிலாளர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது, எனவே உயரதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஓட்டுனர்கள் சிலர் மதுபானம் அருந்திவிட்டு வண்டி ஓட்டுவதாக வந்த தகவலை தொடர்ந்து அவர்களுக்கு மதுபரிசோதனை முகாம் நடத்தப்பட்டதால், காலை நேரத்தில் அந்த வண்டி இயக்கவில்லை. மற்றபடி வண்டி நாள்தோறும் இயக்கப்படுகிறது என்றனர்.