தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு பயிலகத்தை நடிகர் விஜய் இன்று சேலத்தில் தொடங்கியள்ளார்.
சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து, தனது கட்சியின் முதல் மாநாட்டை வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார். இதுவரை சினிமா ரசிகர்களாக மட்டுமே இருந்த தனது ரசிகர்களை இனி அரசியல் களத்திற்கு மாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு தவெக கட்சி தலைவராக விஜய்க்கு உள்ளது. ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி தன்னால் முடிந்த உதவிகளை மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் செய்தாலும், கள அரசியலுக்கு அவர்கள் புதியவர்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு அரசியல் பயிலகத்தை இன்று சேலத்தில் தொடங்கியுள்ளார் தவெக தலைவர் விஜய். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மன் பாளையம் பகுதியில் இந்த பயிலகம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) தலைமையேற்று நடத்தி வருகிறார்.
இப்பயிலகத்தில், தவெக முதல் மாநாடு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாநாடு பணி குழுவினர், பொறுப்பாளர்கள் வருகை புரிந்துள்ளனர். இந்த பயிலக்கத்தில் தவெக தொண்டர்களை எப்படி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என பொறுப்புடன் வழிநடத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தப் பயிலகத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “மக்கள் இயக்கமாக இருந்த நமது பாதை தற்போது அரசியல் இயக்கமாக வளர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்துள்ளார் நம் தளபதி (விஜய்). தமிழகத்தில் எங்கும் தளபதி கொடி பறக்கிறது. இந்த பயிலகத்தில் கூறும் அறிவுரைகளை தான் இனி வரும் காலங்களில் நிர்வாகிகள் பின்பற்ற வேண்டும். அப்பா அம்மாவின் காலைத் தவிர வேறு யார் காலிலும் விழக்கூடாது. ” என்றும் அவர் பேசினார்.