உரிய நேரத்தில் பேருந்து இயக்க பள்ளி மாணவி தேனி கலெக்டரிடம் மனு.
பள்ளி நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி செல்ல இயலவில்லை. ஆட்சியர் அலுவலகம் தேடி வந்து மனு அளித்த ஒன்பதாம் வகுப்பு மாணவியால் பரபரப்பு.
தேனி மாவட்டம் போடேந்திர புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா இவர் தேனியில் உள்ள அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
தேனியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போடேந்திரபுரத்தில் இருந்து காலையில் புறப்பட்டு பள்ளிக்கு வந்து மாலையில் போடேந்திரபுரம் திரும்பிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் போடேந்திரபுரம் வழியாக காலை 8 மணிக்கு அரசுப் பேருந்து தேனிக்கு செல்கிறது.

அந்தப் பேருந்தை அந்தப் பேருந்தை தவற விட்டால் அடுத்து 9.40 மணிக்கு தான் அடுத்த பேருந்து அவ்வழியாக தேனிக்கு செல்கிறது.
காலை 9.30க்கு பள்ளி துவங்கும் நிலையில் 8 மணி பேருந்தை பிடிக்க 7.45 மணிக்கே பேருந்து நிலையத்தில் தயாராக நிற்க வேண்டியுள்ளது.
சற்று தாமதமானாலும் அப் பேருந்து சென்றுவிடுகிறது. அதற்கு அடுத்து 9.40 பேருந்து தான் உள்ளது.
இதனால் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல இயலவில்லை.
மேலும் போடேந்திரபுரம் வழியாக தேனிக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் என்று எட்டு மணிக்கு பெரும் கூட்டமாக திரண்டு அப் பேருந்தில் பயணம் செல்வதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் இயலவில்லை. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பேருந்தை தவற விடும் பள்ளி மாணவ மாணவிகள், தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவருமே அன்று அவரவர் பணிக்குச் செல்ல இயலாது.
எனவே பள்ளி மாணவ மாணவிகள், மற்றும் தொழிலாளர்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் உரிய நேரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியான ஸ்ரீஜா மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்து நேரடியாக மனு அளித்தார்.
அந்த மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாணவியிடம் உறுதியளித்தார்.