தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தம்மணம்பட்டியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவத்தில் கூடலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூரைச் சார்ந்தவர்கள் கர்ணன்(50) மற்றும் கண்ணன்(45). இருவரும் விவசாயக் கூலித் தொழில் செய்து வருகின்றனர்.
இன்று மாலை இருவரும் கூடலூரில் இருந்து தம்மணம்பட்டி பகுதியிலுள்ள தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் வேலைக்காக சென்றுள்ளனர்.
அப்போது கூடலூரில் இருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடது புறத்திலிருந்து வலது புறமாக திரும்பி உள்ளனர். அப்போது தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த சுப்பையா(35) என்பவர் தனது காரில் குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் குறுக்கே வந்ததால் கார் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி உள்ளது. இதில் கர்ணன், கண்ணன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதனையடுத்து அருகில் இருந்த நபர்கள் காவல்துறையனருக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் உத்தமபாளையம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்..
வாகன விபத்தில் இறந்த இருவரின் உடலையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக தனியார; ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த வாகன விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த சுப்பையாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலூர் பகுதியை சேர்ந்த இருவர் வாகன விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது