


உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆரம்ப பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காந்திபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது தவறு எனவும், அந்த தீர்மானங்களை நிறைவேற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும், அல்லது ஒன்றிய அரசு ஆளுநர் ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாலை 6 மணியளவில் கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோசங்களை எழுப்பினர்.

இது குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறும் போது..,
உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக ஆளுநர் ரவி தமிழகத்தில் ஒன்றிய பாஜகவின் கொள்கைகளை செயல்படுத்த திட்டமிட்டது உறுதியாகி உள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களுக்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை வேண்டுமென்றே கையெழுத்திடாததால் பல்வேறு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் தாமதம். பல்கலைக்கழகம் பணிகளின் இடர்பாடுகள் என பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு வந்தோம். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மூலம் பெற்றுள்ள இந்த தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் இது மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது, இதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி என தெரிவித்தார்.


