• Mon. Mar 24th, 2025

ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கின்றனர் – செந்தில்நாதன் எம்எல்ஏ பேச்சு

ByG.Suresh

Mar 1, 2025

அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல தமிழகமே எடப்பாடி பழனிசாமி அரசு அமைய வேண்டும் என்றும், மோசமான ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்ப காத்திருக்கின்றனர் என சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பேசியுள்ளார்.

சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அஇஅதிமுக காளையார்கோவில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள உடைகுளம் ஊராட்சி ஒய்யவந்தான் கிராமம் மற்றும் செங்குளம் ஊராட்சியில் பூத் கிளைக் கழகம் அமைக்கப்பட்டது குறித்து, சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், கழக அமைப்பு செயலாளருமான ஏகே. சீனிவாசன் மற்றும் மாவட்ட கழக செயலாளர் எம். எல். ஏ செந்தில்நாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல தமிழகமே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை , பொய்யான தேர்தல் வாக்குறுதி அளித்ததால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தினமும் ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் பேசிய கழக அமைப்பு செயலாளர் சீனிவாசன் தமிழகத்தில் மூன்று வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். ஸ்டாலின் ஆட்சியில் சட்டத்தை கண்டு குற்றவாளிகள் பயமின்றி உலா வருகின்றனர். தமிழகம் இது வரை கண்டிராத நிர்வாக திறனற்ற மோசமான ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப அனைத்து தரப்பு மக்களும் தயாராகி விட்டனர். இதற்கான அடித்தளமாக கழக நிர்வாகிகள் பூத் கமிட்டி பணிகளை நேர்மையான முறையில் அமைத்து பணியாற்ற வேண்டும் என்று பேசினார். ஆய்வுக்கூட்டத்தில் காளையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஸ்டீபன் அருள், அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன், தகவல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் குழந்தைசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.