

கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் சாயப்பட்டறை ரசாயனம் கலந்த பாய்லர் டேங்க் வெப்பத்தில் வெடித்த விபத்தில், அருகில் உள்ள கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் ரசாயனம் கலந்த வெப்பத் தண்ணீர் புகுந்து 19 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே சிப்காட்டில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், குடிகாடு என்ற பகுதியில் ரசாயனத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வரும் நிலையில், இங்கு 100-க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர்.
இந்நிறுவனத்தில் கழிவுநீரை சுத்திகரிக்கும் சுமார் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் ஒன்று உள்ளது. அந்த பாய்லர் டேங்க் இன்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். மேலும், பாய்லர் டேங்க் வெடித்ததால் வெளியேறிய ரசாயன தண்ணீர் ஊருக்குள்ளும் புகுந்தது. இதனால், 3 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், கழிவுநீர் மிகவும் சூடாக இருந்ததால் சிலருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீரென கடலூர் – சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த நிறுவனம் சாயத் தொழிற்சாலை என்பதால், இதில் இருந்து வெளியேறக் கூடிய கழிவுநீர் அங்கிருக்கும் ஒரு பாய்லரில் சேமித்து வைக்கப்படுகிறது. இதன் பின்னர் அதை சுத்திகரித்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், திடீரென அந்த டேங்க் வெடித்ததால் ரசாயன கழிவு நீர் முழுவதும் கருப்பு நிறமாக வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் கடும் துர்நாற்றமும் வீசியதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

