

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சென்னையில் 4 நாட்கள் ட்ரோன்கள் பயிற்சி வருகிற மே 27ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
“தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சுயமாக தொழில் தொடங்க, தொழிலை முன்னேற்றி லாபம் பெறுவது எப்படி, தொழில்நுட்பங்களை தொழிலில் உபயோகிப்பது உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் நிபுணர்கள் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது சினிமாட்டிக் ட்ரோன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
சினிமா துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அதில் மிக முக்கியமான கேமரா இயக்குவது என்பது சினிமாவின் முக்கிய பணி ஆகும். கேமரா டெக்னிஸ் மூலம் சினிமாவை பல கோணங்களில் காட்சிப்படுத்த முடியும். அந்த வகையில், ட்ரோன் கேமராக்கள் தற்காலத்தில் பெருமளவு உபயோகிக்கப்படுகிறது. இதனை தொழிலாக மாற்றி சம்பாதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் இந்த பயிற்சியை அளிக்கிறது.
சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சினிமாட்டிக் ட்ரோன் பயிற்சி வரும் மே 27 முதல் மே 30 வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சினிமாட்டிக் ட்ரோன் நுட்பங்கள், வான்வழி கதையம்சம், முக்கியமான சினிமாட்டிக் ட்ரோன் ஷாட்கள் மற்றும் ட்ரோன் ரிமோட் கட்டுப்பாடுகள், சினிமா ஸ்டண்ட் காட்சிகளுக்கான ட்ரோன் ஷாட்கள், சினிமா பாடல் காட்சிகளுக்கான ட்ரோன் ஷாட்கள், சினிமா D.I. நிற ஒழுங்குபடுத்தல் மற்றும் எடிட்டிங் நுட்பங்கள்.
DGCA சட்ட மற்றும் ஒழுங்கமைப்பு குறித்த பரிசீலனைகள் மற்றும் விதிமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் https://editn.in/ என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட் இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032.
இந்த பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி பெறும் நபர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும்” என கூறப்பட்டுள்ளது.

