

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பதவி வகித்து வருகிறார். ஆளுநர் ஆர்என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவதும், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதுமாக உள்ளார் என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஆட்டுக்கு எதற்கு தாடி? என்பதை போல் தமிழ்நாட்டிற்கு ஏன் ஆளுநர் என திமுக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருமே தொடர்ந்து ஆளுநர் ஆர்என் ரவியை விமர்சித்து வருகின்றனர். ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் கிடப்பில் போடப்படுவது தொடர்பாக, ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆளுநருக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம், மாநில அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. ஆளுநர் ஆர்என் ரவியும் தமிழக அரசின் செயல்பாடுகளை தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் மேடைகளில் விமர்சித்து வருகிறார்.
ஆர்என் ரவி, ஒரு ஆளுநரை போன்று இல்லாமல் அரசியல்வாதியை போல் செயல்படுகிறார் என திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆளுநர் ஆர்என் ரவி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவர். வெளியுறவுத்துறை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். நாகாலாந்து மற்றும் மேகாலாயா ஆகிய மாநிலங்களிலும் ஆளுநராக பணியாற்றியுள்ளார் ஆர்என் ரவி. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராக பாஜக அரசால் நியமிக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் வரும் ஜூலை மாதத்துடன் ஆளுநர் ஆர்என் ரவியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாட்டுக்கான அடுத்த ஆளுநரை பாஜக மேலிடம் தேர்வு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்என் ரவியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் புதிய ஆளுநரை அமித்ஷா தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

