• Fri. Apr 19th, 2024

குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம்….

Byகாயத்ரி

Jun 14, 2022

மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று வீடுகள் தோறும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நோட்டீசு வழங்கி வருகிறார்கள். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பெயரில் எச்சரிக்கை நோட்டீசில் வழங்கப்பட்டு வருகிறது. அதில்பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை (உணவு, காய்கறி-பழம், இறைச்சி, தோட்டம் மற்றும் காய்ந்த மலர்கள், இலை கழிவுகள்), மக்காத குப்பை (பிளாஸ்டிக் பைகள், தண்ணீர், கண்ணாடி, பிளாஸ்டிக், அட்டைகள், காகிதம், செய்தித்தாள்கள், தெர்மோகோல், தோல், இரும்பு, மரம், டயர், டியூப், ரப்பர் கழிவுகள்) என வகை பிரித்து அவற்றை தினந்தோறும் வரும் மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீங்கு விளைவிக்க கூடிய வீட்டின் அபாயகரமான குப்பையை (தேவையற்ற வர்ண டப்பாக்கள், காலி பூச்சி கொல்லி மருந்து டப்பாக்கள், சி.எப்.எல், குழல் மற்றும் இதர விளக்குகள், காலாவதியான மருந்துகள், உடைந்த பாதரச ஜீரமானிகள், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், ஊசி மருந்து குழல்கள் மற்றும் மாசடைந்த அளவை மானிகள் மற்றும் சுகாதார கெடுதல் கழிவுகள்) போன்ற வற்றை வாரத்திற்கு ஒருமுறை தனியாக வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்களால் பிரித்து கொடுக்கப்படும் மக்கும் குப்பையை பதப்படுத்தி, அதிலிருந்து இயற்கை உரம் மற்றும் இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது. மேலும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும் மற்றும் பதப்படுத்தவும் அனுப்பப்படுகிறது.

இதன் மூலம் சென்னையின் மிகப்பெரிய குப்பை கிடங்குகளான கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லும் குப்பையின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டு சுற்றுப்புற தூய்மை மேம்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன் படி பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் தீங்கு விளைவிக்க கூடிய வீட்டு உபயோக குப்பை என வகை பிரித்து வழங்காவிட்டால் ரூ.100 (தனி நபர் வீடுகள்), ரூ.1,000 (அடுக்குமாடி குடியிருப்புகள்), ரூ.5 ஆயிரம் (அதிக குப்பையை உருவாக்குபவர்கள்) அபராதம் விதிக்கப்படும். இந்த விதிகளை அடுத்த முறை மீறினால் அபராத தொகை 2 மடங்காக இருக்கும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் இந்த நோட்டீசை வழங்கி, வீட்டு உரிமையாளர்களிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *