போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், என்னை ஜாதி பெயரை சொல்லியும், ஒன்றிய தலைவர் பேச்சை தான் கேட்பாயா, உன்னை மாற்ற வேண்டும் என்றும் மிரட்டினார் என ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பி.டி.ஓ., ராஜேந்திரன் புகார் தெரிவித்திருப்பதுதான் பரபரப்பே!
மேலும் இது குறித்து பி.டி.ஓ கூறியதாவது:
மார்ச் 27 காலை என்னையும் மற்றொரு பி.டி.ஓ., அன்பு கண்ணனையும் அமைச்சர் ராஜகண்ணப்பன் வீட்டிற்கு வரச் சொன்னதாக உதவியாளர் சத்தியேந்திரன் கூறினார்.அமைச்சரை சந்திக்க சிவகங்கை வீட்டிற்கு சென்றபோது அவர் என்னை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி, ஒன்றிய தலைவர் சொல்றதை மட்டும் தான் கேட்பாயா, எங்க கட்சிக்காரர் சொல்வதை கேட்க மாட்டாயா. உன்னை பி.டி.ஓ., சீட்டில் வைக்க மாட்டேன். உடனடியாக உயர் அதிகாரி அமுதாவிடம் சொல்லி பணிமாறுதல் செய்வேன். பி.டி.ஓ., பதவி வகிப்பதற்கு உனக்கு தகுதி இல்லை என கோபமாக பேசினார். வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. நேற்று காலை இது தொடர்பாக கலெக்டர், கூடுதல் கலெக்டரிடம் தகவல் தெரிவிக்க சென்றேன். சந்திக்க முடியவில்லை. திரும்ப வந்து ஒன்றிய அலுவலகத்தில் வேலை செய்கிறேன். இது நான் சந்திக்காத மனக் காயங்களை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.