பண பரிவர்த்தனை மற்றும் பிற நிதி சேவைகளை கொண்ட பேடிஎம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதன் ஆரம்ப வெளியீட்டு விலையிலிருந்து சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளது.
தொடர்ந்து பேடிஎம் பங்குகள் சரிவை சந்தித்து வரும் நிலையில் மும்பை பங்குச் சந்தை அது பற்றி விளக்கம் கோரியுள்ளது.பேடிஎம் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலானது. முதலீட்டாளர்கள் மூலம் ரூ.18,300 கோடி திரட்ட எண்ணியது. ரூ.1.39 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக செபியால் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் பேடிஎம் பங்குகள் பட்டியலிடப்பட்ட ஆரம்ப நாளிலேயே 27 சதவீதம் சரிவை சந்தித்தது.
அதன் பிறகு பேடிஎம் பங்குகள் தொடர்ந்து இறங்கு முகத்திலேயே இருக்கிறது. கடந்த மார்ச் 11 அன்று பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவையில் தொழில்நுட்ப ஓட்டைகள் இருப்பதாக கூறி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்தது. அதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 30 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன அதன் பங்குகள்.ரூ.2,150 என ஐ.பி.ஓ., விலை நிர்ணயிக்கப்பட்ட பேடிஎம் பங்குகள் ரூ.541 என்ற புதிய வீழ்ச்சியை செவ்வாயன்று கண்டது. இதன் மூலம் ரூ.1,39,432 கோடி சந்தை மதிப்பிலிருந்த நிறுவனம், இப்போது வெறும் ரூ.35,273 கோடியாக மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது.
ரூ.1 லட்சம் கோடி கரைந்துள்ளது. பேடிஎம்மில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்களில் பலர் தங்களின் முக்கால்வாசி பணத்தை இழந்துள்ளனர்.இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையான பி.எஸ்.இ., பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனிடம் பங்குவிலையில் நடந்துக் கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க நகர்வு குறித்து விளக்கம் கேட்டுள்ளது. முதலீட்டாளர்கள் நிறுவனத்தைப் பற்றிய சமீபத்திய தகவல்களை வைத்திருப்பதை உறுதி செய்வதற்காகவும், முதலீட்டாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் வகையில் சந்தைக்கு தகவல் தெரிவிக்கும்படி கோரியுள்ளது. விலை சரிவு குறித்து பங்குச்சந்தை விளக்கம் கேட்பது பொதுவான விஷயமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.