• Fri. Apr 19th, 2024

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கனமழையால் சரிந்து விழுந்த கமலாலயக் குளத்தின் ஒரு பகுதி – அமைச்சர் நேரில் ஆய்வு…

உலகப் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான தியாகராஜர் திருக்கோயில் கமலாலயக் குளத்தின் ஒரு பகுதி நேற்று பெய்த கனமழையின் காரணமாக சரிந்து விழுந்தது, அந்த இடத்தை இந்துசமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது தியாகராஜர் கோயில். இந்த கோயிலுக்கு ஐந்து வேலி நிலப்பரப்பில் எதிரே அமையப்பெற்றுள்ளது கமலாலயக் குளம். நேற்று இரவு திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக அந்த குளத்தின் தென்கரையில் அமையப் பெற்றுள்ள சுற்றுச்சுவர் சுமார் 100 அடி நீளம் உள்வாங்கி குளத்துக்குள் விழுந்துவிட்டது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு வடகரையில் இதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

அதனை ஆய்வு செய்ய தியாகராஜர் திருக்கோவிலுக்கு வந்து மேற்பார்வையிட்ட அமைச்சர் சேகர் பாபு
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்தார். அப்போது, “திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் கமலாலயக்குளம் ஒரு கரை சரிந்து விழுந்ததை கேள்விப்பட்டவுடன், தமிழக முதல்வர் இந்து சமய அறநிலை துறை மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் உடனடியாக தொடர்பு கொண்டு விழுந்த கரைகளை உடனடியாக அப்புறப்படுத்தி மேலும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும், குளிக்க வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார். ஒட்டுமொத்தமாக கமலாலயக் குளத்தின் மதில் சுவரை வல்லுனர்களை கொண்டு அதன் ஸ்திரத்தன்மையை ஆராய்ந்து நிரந்தரமான ஒரு தீர்வை காண்பதற்கும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குளம் முழுவதும் புனரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன் அனைத்து வகை முன்னெச்சரிக்கையும் எடுத்து மதில் சுவர் கட்டி முடிக்கப்படும்.” என்றார்.

மேலும்,” தியாகராஜர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஓடை காணாமல் போயிருக்கிறதே என்கிற கேள்விக்கு பதில்கூறியவர்,” காணாமல் போவதற்கு இது ஒன்றும் மளிகை பொருள் அல்ல. இடம் அங்கேயேதான் இருக்கும். குறிப்பிட்டிருக்கும் அந்த இடத்தை ஆய்வு செய்து சட்டத்தின்படி அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

சிலை கடத்தல் குறித்தான கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர்,” கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை விட இந்த ஐந்து மாத திமுக ஆட்சியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான சிலைகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன. முழுவதுமாக ஓராண்டு திமுக ஆட்சி நிறைவு பெறும்போது வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சிலைகள் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளன. எத்தனை சிலை கடத்தல் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளன என்கிற விவரங்களை அளிப்போம் ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *