• Fri. Apr 26th, 2024

நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்..!

Byவிஷா

Mar 27, 2023

தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயமான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனையை தொடர்ந்து கொடிபட்டம் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கொடிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி உள்பிரகார தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடிமரத்திற்கு மஞ்சள், வாசனை பொடி, பால், தயிர், இளநீர், அன்னம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 4-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி வேணுவனநாதர் தோன்றி வரலாறு வாசித்தல் நிகழ்ச்சியும், இரவு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருநாளான அடுத்த மாதம் 4-ந் தேதி இரவு கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற்பார்வையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *