டெல்டா மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களாகவே தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 40,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது விவசாயிகளைக் கதறச் செய்துள்ளது. இந்த கனமழையால் சுமார் 50,000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அதை போலவே தஞ்சாவூர் மாவட்டத்திலும் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி சாரல் மழை, கனமழை என மாறி மாறி பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளான அறந்தாங்கி, மீமிசல், கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது.
நாகப்பட்டினம் மாவட்டம் மீனம்பநல்லூர், திருக்குவளை பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 2 ஆயிரம் ஏக்கர் பின்பட்ட குறுவை மற்றும் தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் 12,500 ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பகுதிகளில் 500 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கடந்த 4 நாட்களாக மழைநீரில் மூழ்கியுள்ளது. இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசலில் 25 ஆயிரம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 50,000 மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் ரூ.1 கோடிக்கு மேல் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டிற்கு சுற்றுலா படகுகள் செல்ல நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. மேகவெடிப்பால் நேற்று முன்தினம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 43.8 செ.மீ கனமழை கொட்டி தீர்த்தது. தங்கச்சிமடத்தில் 33.84 செ.மீ, பாம்பனில் 28 செ.மீ, மண்டபத்தில் 27.12 செ.மீ மழை பதிவானது. நேற்று 2வது நாளாகவும் ராமேஸ்வரம் தீவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் முதல் பாம்பன் பாலம் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளமான இடங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. தொடர் மழையால் தீவு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் தங்கும் விடுதிகளில் முடங்கினர். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் மாவட்டத்தின் பெரும்பாலான பள்ளிகளுக்கு முழுநேர விடுமுறை விடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் நேற்று அதிகாலை முதல் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்குள்ள சிவன் கோயில் உள்ளேயும் மழைநீர் புகுந்தது. இதேபோல தென் மாவட்டங்களில் பல இடங்களில் நேற்றும் கனமழை நீடித்தது.