

ஆப்ரேஷன் கங்கா மூலம் தமிழக மாணவர்களை மீட்க பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்கிருந்த தமிழக மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர் .பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்பிற்காக உக்ரைன் சென்ற அவர்கள் திடீர் போர் தாக்குதலின் காரணமாக உணவு, இருப்பிடம் இன்றி அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் முயற்சியின் காரணமாக தற்போது இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மருத்துவம் படித்து வரும் 9 மாணவ மாணவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
1921 நபர்கள் 3501 தொலைபேசி அழைப்புகள் மூலமும் 4420 மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு உக்ரைன் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் பெற்றோர் உறவினர்கள் மூலமாக அவர்கள் விவரங்கள் பெறப்பட்டு உடனடியாக மத்திய அரசுக்கு, மாநில அரசு அனுப்பியது. அதன் அடிப்படையில் உடனடியாக மாணவர்கள் மீட்கப்பட்டனர்.
அந்த வகையில் மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையின் காரணமாக உக்ரைனில் மருத்துவ கல்வி பயின்று வந்த ஆயிரத்து 926 மாணவர்கள் , இதுவரை 1890 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட தமிழ் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் 1524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் தமிழகம் அழைத்துவரப்பட்டு உள்ள நிலையில், மீதமுள்ள 366 மாணவர்கள் அவர்களது சொந்த செலவில் தமிழகம் திரும்பினர்.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கித்தவித்த இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் பத்திரமாக மீட்டதற்கு, அதிமுக சார்பிலும் ,தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும் பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியர்களை மட்டுமல்லாமல் வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் மத்திய அரசு மீட்டுள்ளது என்று அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
