• Fri. Apr 19th, 2024

டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு..

மாநில உரிமைகளை காக்க டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாட்டில் திமுக கலந்து கொள்ளும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் கடந்த சில மாதங்களாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி முதல் மேற்கு வங்க சட்டசபையை காலவரையறையின்றி முடக்குவதாக ஆளுநர் ஜெகதீப் தங்கர் ட்வீட் போட்டிருந்தார். 174 சட்ட பிரிவின் படி மேற்கு வங்க சட்டசபையை முடக்குவதாக தெரிவித்திருந்தார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ஆளுநர் ஜெகதீபுக்கு ட்வீட் போட்டிருந்தார். அதில் மேற்கு வங்க சட்டசபையை ஆளுநர் முடக்கிய செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகே உள்ளது என தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஆளுநர் ஜெகதீபுக்கு பதில் கொடுத்துள்ளார். அதில் கடந்த 11ஆம் தேதி மாலை மேற்கு வங்க சட்டசபை விவகாரங்கள் துறை அமைச்சரவையில் இருந்து அடுத்த சட்டசபை கூட்டத் தொடர் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே திரிணாமூல் காங்கிரஸ் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் சட்டசபையை முடித்து வைக்க உத்தரவிட்டேன்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் கடுமையான அவதானிப்புகள் உண்மை நிலவரத்துடன் ஒத்து போகவில்லை. உண்மையை உறுதி செய்து கொள்ளாமல் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் மனதை புண்படுத்தும்படி உள்ளது. இத்துடன் சட்டசபையை முடித்து வைக்க கோரி மாநில அரசு அனுப்பிய கடிதத்தின் நகலை வைத்துள்ளேன் என மேற்கு வங்க ஆளுநர், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் உரையாடினார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசியலமைப்புக்கு எதிராக நடந்து கொள்வது குறித்து கவலையையும் வேதனையையும் தெரிவித்தார்.

அப்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்கள் மாநாடு நடத்த போவதாக தெரிவித்தார். மாநில உரிமைகளை காக்க திமுக எப்போதும் துணை நிற்கும் என அவருக்கு நான் வாக்குறுதி அளித்தேன். டெல்லியில் எதிர்க்கட்சி முதல்வர்கள் கலந்து கொள்ளும் மாநாடு விரைவில் நடைபெறுகிறது என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *