• Thu. Apr 18th, 2024

ஓபிஸ் பொதுக்குழு உறுப்பினர்களை துன்புறுத்தினார்- இபிஎஸ் புகார்

ByA.Tamilselvan

Jul 8, 2022

ஓபிஎஸ் பொதுக்குழு உறுப்பினர்களை துன்புறுத்தியதாக இபிஎஸ் தேர்தல் கமிஷனில் புகார் .
ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி எடப்பாடி பழனிசாமி அணியினர் மிக நீண்ட விளக்கம் அளித்துள்ளனர். . தேர்தல் கமிஷனில் அளித்துள்ள மனுவில் இபிஎஸ் கூறியதாவது…
அ.தி.முக. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் கட்சி தொண்டர்களுக்கு ஏராளமான தொல்லைகளை கொடுத்து வந்தார். தனது பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சுயநலத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களையும் துன்புறுத்தினார். அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கட்சி விரோத செயல்களாகவே உள்ளன. கட்சி விதிகளை மீறுவதற்கு அவருக்கு தார்மீக உரிமையும் கிடையாது. முதலில் அவர் பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அது நடக்காமல் போகவே போலீஸ் மூலம் பொதுக்குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தினார். அதன்பிறகும் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.
இவற்றில் பலன் கிடைக்காததால் தன்னை பற்றி சுய விளம்பரம் செய்து கொண்டார். அதோடு தனது ஆதரவாளர்களை கட்சி நலனுக்கு எதிராக தூண்டிவிட்டார். அவர்கள் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக செயல்பட வைத்தார். இவை அனைத்துமே அ.தி.மு.க. கட்சி விதிகளுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகும். இதற்காக அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம். அ.தி.முக.வில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால் அந்த 2 பதவிகளும் காலாவதியாகி விட்டது. ஓ.பன்னீர்செல்வம் கட்சி விதிகளை கடை பிடிப்பதில் உண்மையானவராக இருந்திருந்தால் அதை அவர் பொதுக்குழு கூட்டத்தில் காட்டி இருக்க வேண்டும். அதற்கு மாறாக 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று கோர்ட்டில் போய் மனு கொடுத்தார். இதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவருக்கு அவராகவே தடை விதித்து கொண்டுள்ளார் என்பதுதான் உண்மை. ஆனால் உண்மையை மறைத்து ஒருதலைபட்சமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி தந்திருக்கிறார். அவரது கடிதம் கட்சி சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே அ.தி.மு.க. தொடர்பாக இனி அவரிடம் தேர்தல் ஆணையம் எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.
அதுபோல அவருக்கு ஆதரவாக யார் மனு கொடுத்தாலும் அவர்களுக்கும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அவர் செல்வாக்கை இழந்துவிட்டார். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்கு எதிராக இருந்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெருக்கடியான காலக்கட்டத்தில் கட்சி விதி 20ஏ (7) பிரிவின்படி நிர்வாகிகள் கட்சியை வழிநடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் கட்சி வழி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *