• Fri. Jan 17th, 2025

பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

ByKalamegam Viswanathan

Jan 10, 2025

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு “கோவிந்தா”எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.

அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் மற்றும் அதன் உபகோவிலான மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் திருஅத்யனம் உற்சவம் எனும் பகல் பத்து, ராப்பத்து கடந்த 31ம்தேதி துவங்கிய நிலையில், இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி விழா இன்று அதிகாலை கோயில் வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது.

விழாவையொட்டி இன்று அதிகாலை 05.15 மணிக்கு மேல் 06.15 மணிக்குள் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மங்களவாத்தியங்கள் முழங்கிட தனது தீவட்டி பரிவாரங்களுடன் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தளியதை தொடர்ந்து பக்தர்களும் பரமபத வாசல் வழியாக வெளியே வந்து “கோவிந்தா” எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலையிலேயே ஆயிரகணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்தனர். இதனால் கோவில் வளாகம் மற்றும் சுற்று பகுதிகளில் காவல் துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.