
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இன்று ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.
அதன்படி மாநிலம் முழுவதும் 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதன் காரணமாக மாணவர்களுக்கு நான்கு சுற்றுகளாக கலந்தாய்வு நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் இன்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும் , அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. வருகிற 23ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து வருகிற 25-ம் தேதி முதல் அக்டோபர் 21ம் தேதி வரை பொது பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 7.5% ஒதுக்கீட்டில் 22,587 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
