• Sat. Apr 27th, 2024

நாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு

நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பேராயுதமாக விளங்கி வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதிதான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கிவைக்கப்பட்டது. முதல்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.

ஓராண்டின் நிறைவில், சுமார் 156.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், நாட்டில் உள்ள 92 சதவீத பெரியவர்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருப்பார்கள். 68 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியிருப்பார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

தடுப்பூசி திட்டம் செயல்படுத்தத் தொடங்கி ஓராண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு, மத்திய அரசு சார்பில் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது.
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.

கடைசியாக, 2022ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 – 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 3.38 கோடி தடுப்பூசிகள் சிறார்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்திட்டம், உலகிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்ற தடுப்பூசி திட்டம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மிகவும் வளர்ந்து நாடுகளில் கூட மிகக் குறைவான மக்களே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், நமது நாட்டில் பெரிய அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நாட்டில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி எட்டப்பட்டது. கடந்த 7ஆம் தேதி இது 150 கோடியைத் தொட்டது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 66 லட்சம் தடுப்பூசிகள் என்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, இது 156.76 கோடியை தொட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தற்போது முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கிவிட்டது. அதன்கீழ் 43.19 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *