ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறிப்பிட்ட காலத்திற்குள் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 31 ஆயிரம் வரியினங்கள், 16 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 12 லட்சம் காலிமனை இனங்கள், 311 கடை வாடகை மற்றும் குத்தகை இனங்கள் உள்ளன. நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலுவை வரிகள் அனைத்தும் சென்ற ஆண்டு வசூல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் நிலுவை வரியையும் சேர்த்து நூறு சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டுக்குரிய தமிழகத்தின் சிறந்த நகராட்சிக்கான விருது மற்றும் ரூ. 15 லட்சம் ரொக்க பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி வென்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு சொத்து வரி ரூ. 4 கோடி, குடிநீர் வரி ரூ. 1. 76 கோடி, வாடகை மற்றும் குத்தகை உள்ளிட்ட வரியற்ற வருவாய் ரூ. 1.58 கோடி என அனைத்து வரி மற்றும் வரியற்ற வருவாய் இனங்கள் அனைத்தும் நூறு சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நூறு சதவீதம் வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் தெரிவித்ததாவது..,
‘கடந்த ஆண்டுகளில் வரி நிலுவை தொகை இருந்ததால் வரி வசூலில் சிரமம் நிலவியது. இந்த ஆண்டு நிலுவை வரி இல்லாததால் நடப்பு நிதியாண்டின் வரி மற்றும் வரியற்ற வருவாய் இனங்கள் அனைத்தும் நூறு சதவீதம் வசூல் செய்யப்பட்டு விட்டது. இதன் மூலம் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கீட்டை பெற முடியும். மேலும் நகராட்சியின் வரியற்ற வருவாயை பெருக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.