ஓணம் பண்டிகையை கொண்டாடும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கும் ஓணம் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரத்துவம் – சமூக நல்லிணக்கத்தின் பெருமைமிகு அடையாளமாக ஓணம் பண்டிகை திகழ்கிறது.
கேரள மாநிலத்தில் ‘அறுவடைத் திருநாள்’ எனப்படும் ஓணம் பண்டிகை – ஆவணி மாதம் முதல் நாளன்று, “அத்தப்பூ” கோலம் போட்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வீரமும், ஈரமும் மிகுந்த ‘மாவலி’ சக்ரவர்த்தியை கேரள மக்கள் இன்முகத்துடன் இரு கைகூப்பி வணங்கி வரவேற்கும் நாளாகத் தொடங்கி, அடுத்தடுத்த நாட்களில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், உணவு பரிமாற்றங்கள் ஆகியவற்றை தாராளமாக பகிர்ந்து கொண்டு, தங்களுக்குள் உள்ள அன்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் அற்புதமான பண்டிகைத் திருநாள் இது என குறிப்பிட்டுள்ளார்.