மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வைரஸ், வீரியமிக்கதாகவும், ஆபத்தானதாகவும் இருக்குமென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க ஒன்றிய அரசு, நாடு முழுவதும் சர்வதேச விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நோய் பரவிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த புதிய கட்டுப்பாடு கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்த நிலையில் பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மகாராஷ்டிராவில் 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் 3 பேர், பிம்ரியில் 4 பேர், புனேவில் 7 பேர் என மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. மகாராஷ்டிரா -17, ராஜஸ்தான் -9, கர்நாடகா- 2, குஜராத் -3, டெல்லியில் ஒருவருக்கு என நாடு முழுவதும் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.