• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

செவிலியர் அடித்துக் கொலை – தீவிர விசாரணையில் போலீசார்

ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியில் அரசு மருத்துவமனை செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்(44). இவர் திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி. ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகளும் திண்டுக்கலில் சுரேஷிடம் வசித்து வருகின்றனர். ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் செல்வி தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சுரேஷ் அவரது மனைவி செல்விக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக செல்போன் சுவிட்ச் ஆப் ஆன நிலையில் இருந்ததால் அவருடைய உறவினர்களிடம் தெரிவித்து வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார். வீடு பூட்டி இருந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வி வீட்டில் உள்ள பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் சென்று விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை செய்தனர். மேலும் டிஎஸ்பி தங்ககிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.