• Mon. Apr 28th, 2025

மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக என்.ஆர். காங்கிரஸ்-பிஜேபி அரசு உள்ளது – மாநில செயலாளர் சலீம்

ByB. Sakthivel

Mar 22, 2025

புதுவையில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதலீட்டாளர்கள் மிரட்டப்படுகின்றனர், கொலைகள் சர்வசாதரணமாக நடக்கிறது மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக என்.ஆர். காங்கிரஸ்-பிஜேபி அரசு உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாநில செயலாளர் சலீம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பிஜேபி வேட்பாளர் தோல்வியுற்றதால் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் இடம் பெறும் என மக்கள் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பு கானல் நீராகிவிட்டது. நிதி நெருக்கடியை தீர்க்க பட்ஜெட்டில் எந்த வழிமுறையும் இடம் பெறவில்லை என்றார்.

புதிதாக மதுக்கடைகளையும், மது தொழிற்சாலைகளையும் திறப்போம் என முதல் அமைச்சர் அறிவித்துள்ளார். புதிய மதுபான ஆலைகளால் அரசுக்கு ரூ.500 கோடி வருமானமும், 5 ஆயிரம் பெண்களுக்கு வேலை கிடைக்கும் என்கிறார்.

மது ஆலைகளில் தொழிற்சங்கங்கள் உள்ளது. அங்கு ஒரு ஆலைக்கு 75 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். இதனால் வேலை வாய்ப்புகள் உருவாகாது.மதுபானம் தயாரிப்பது தான் பெண்களின் வேலையா … ? முதல் அமைச்சர் பொய்யான தகவல்களை கூறுகிறார் என சலீம் தெரிவித்தார்.

முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி மதுஆலை அனுமதிக்கு ரூ.15 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். இதற்கு அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த மவுனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளலாமா? என கேள்வி எழுப்பிய அவர்,..

புதுவையில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதலீட்டாளர்கள் மிரட்டப்படுகின்றனர். கொலைகள் சர்வசாதரணமாக நடக்கிறது. புதுவை மக்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன் வருவதில்லை. பஞ்சாலைகள் இடத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தி வருகிறோம். இதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளவில்லை.

இந்த அரசு நிர்வாக அறிவற்ற அரசாக உள்ளது. மதுபான ஆலை அனுமதி, பட்ஜெட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட்டு, மார்க்சிஸ்ட்டு, கம்யூனிஸ்ட்,டு எம்.எல்., ஆகிய கட்சிகள் சார்பில் வரும் 25ந் தேதி சட்டசபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.