கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினர் தற்போது தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி, விதிகளை மீறி நகருக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கென தனியாக அணுகு (சர்வீஸ்) சாலை எதுவும் இல்லை. இதனால், திருமங்கலம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த வாகனங்கள் கட்டணம் செலுத்தித்தான் சுங்கச் சாவடியை கடக்க வேண்டியுள்ளது. மேலும், டி.கல்லுப்பட்டி பகுதியிலிருந்து நான்கு வழிச் சாலையை பயன்படுத்தாத வாகனங்களும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
பலமுறை பேச்சு நடத்தியும், மறியல், கடையடைப்பு என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், இப்பிரச்சினைக்கு கடந்த 12 ஆண்டுகளாக தீர்வு கிடைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் கவனத்தை ஈர்க்கும் வகையில், நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்த போராட்டக் குழு அறிவித்திருந்தது. இதற்கு முழு ஆதரவு அளிக்கும் வகையில், திருமங்கலம் நகரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் முழுமையாக அடைக்கப் பட்டிருந்தன.
இதனால் உசிலம்பட்டி சாலை, மார்க்கெட் உள்ளிட்ட பல சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கப்பலூர் சிட்கோவில் உள்ள தொழிற் பேட்டைகளும் இயங்கவில்லை. வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினர். இதற்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால், வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து போராட்டக் குழுவினர் கூறியதாவது..,
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் என முதல்வர், அமைச்சர்கள், ஆட்சியர், எம்.பி. என அனைவரும் அளித்த உத்தரவாதம் நிறைவேற்றப்படவே இல்லை. தொடர்ந்து புகார்கள் அளித்தும்யாரும் கண்டுகொள்ளவில்லை. தினசரி பாதிப்புக்குள்ளாவது திருமங்கலம் மக்களும், வியாபாரிகள், ஏழை தொழிலாளர்களும் தான். எனவே, இதற்கு உரிய முடிவு கிடைக்காவிட்டால், அடுத்தகட்டமாக ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றனர்.