தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை எனக்கு கூறி பேரூராட்சி துணை சேர்மனை அமைச்சரிடம் ரகளை ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் துணை சுகாதார நிலைய கட்டடங்கள் , செவிலியர் குடியிருப்பு மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்தார்.
உடன் திமுக தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் , பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் , மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தனக்கு எந்தவித அழைப்பும் கொடுக்கவில்லை மற்றும் மேடையில் இருக்கை ஒதுக்கவில்லை உரிய மரியாதையும் வழங்கவில்லை என தேவதானப்பட்டி பேரூராட்சி திமுக துணை சேர்மன் வழக்கறிஞர் கு. நிபந்தன்… அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார் மற்றும் திமுக.வின் மூத்த நிர்வாகிகளை பார்த்து ஆபாசமான வார்த்தைகளால் பேசி ரகளை ஈடுபட்டார்.
மேலும் ரகளையில் ஈடுபட்ட திமுக துணைச் சேர்மன் மது போதையில் இருந்ததாகவும் விழாவில் கலந்துகொண்டவர்களே கூறுகின்றனர்.
ரகளையில் ஈடுபட்டவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்த போதிலும் ஆபாசமான வார்த்தைகளால் தொடர்ந்து திட்டினார்.
தேனி மாவட்ட அரசு விழாக்களில் தொடர்ந்து திமுகவினரின் உட்கட்சிப் பூசல் வெடித்துக் கொண்டே இருக்கிறது.
