
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளருமான பா.நீதிபதி., எம்எல்ஏ – வாக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 2020 ஆம் ஆண்டு கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி, அவரது மனைவி ஆனந்தி, மகன் இளஞ்செழியன் என மூன்று பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் உசிலம்பட்டி அண்ணா நகரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை குறித்து அறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், அதிமுக நிர்வாகிகளுடன் நேரில் வந்து அரசியல் கால்புணர்ச்சி காரணமாக சோதனை நடைபெறுகிறது என தெரிவித்து, சோதனை முடியும் வரை இருந்து முன்னாள் எம்எல்ஏ நீதிபதி க்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு சென்றார்.
மேலும் அதிகாலை முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவடைந்த நிலையில், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை எனவும், வழக்கு தொடர்பான விசாரணை, தாக்கல் செய்த ஆவணங்கள் குறித்தும், மேலும் ஏதேனும் ஆவணங்கள் கிடைக்குமா என்ற கோணத்தில் சோதனை நடைபெற்றதாக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி யின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
