• Sat. Jun 10th, 2023

ஆலியா படத்திற்கு வந்த புதிய சிக்கல்?

பிப்ரவரி 25ம் தேதி ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள கங்குபாய் கத்தியவாடி படம் வெளியாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். மும்பையின் மாஃபியா குயின் கங்குபாய் பயோபிக் படத்திற்கு எதிராக கங்குபாயின் வளர்ப்பு மகன் கடுங்கோபத்தில் உள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாம்.

பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் அடுத்தடுத்து இரு பிரம்மாண்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி உள்ள கங்குபாய் கத்தியவாடி படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 25ம் தேதி கங்குபாய் கத்தியவாடி வெளியாக உள்ள நிலையில், அடுத்த மாதம் மார்ச் 25ம் தேதி ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி உள்ள RRR படத்தில் சீதா எனும் கதாபாத்திரத்திலும் ஆலியா பட் நடித்துள்ளார். இந்தியாவின் இரு பெரும் இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ள ஆலியா பட் அடுத்தடுத்து இரு படங்களையும் ரிலீஸ் செய்து பாலிவுட்டில் மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க காத்திருக்கிறார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவு காரணமாக பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட்டுக்கு எதிராக போர்க் குரல் எழுப்பி வந்த நிலையில், மகேஷ் பட் இயக்கத்தில் ஆலியா பட் நடித்த சடாக் 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இந்த இரு படங்களும் ஆலியா பட்டுக்கு வெற்றியைத் தேடித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கங்குபாயின் வளர்ப்பு மகன் கங்குபாய் கத்தியவாடி படத்திற்கு எதிராக பிரச்சனைகளை கிளப்பி வருகிறார். ஏற்கனவே இந்த படத்திற்கு எதிராக அவர் தொடுத்த வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் ரெட் லைட் ஏரியாவில் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பெண்களின் துயர் துடைத்த எங்க அம்மாவை விலைமகளாக இந்த படத்தில் மாற்றி விட்டனர். புத்தகம் எழுதும் போதும் சரி படமாக எடுக்கும் போதும் சரி சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியை இந்த சினிமாக்காரங்க வாங்குவதே இல்லை என கங்குபாயின் வளர்ப்பு மகன் மற்றும் மகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருவது திட்டமிட்டபடி இந்த படம் வெளியாவதில் சிக்கலை உருவாக்குமா? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *