நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே மிகவும் முக்கியம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தடை கோரி பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புலிகள் இடம்பெயரும் பகுதிகளில் திட்டத்தை செயல்படுத்த காட்டுயிர் வாரியம் அனுமதி வழங்காது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் இத்திட்டத்துக்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியுள்ளது. தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில், பல்லுயிரிய வளம் மிகுந்த மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ துகள்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், உள்ளூர் மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.