• Fri. Apr 19th, 2024

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புக்கான நீட் தேர்வு

By

Sep 12, 2021 ,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது.
மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வானது கொரோனா தொற்று காரணமாக தாமதமாக நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கையை 155ல் இருந்து 202 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 19 ஆயிரத்து 867 மாணவர்கள் நீட் தேர்வை தமிழில் எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 888 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.

தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் தேர்வு நடக்கிறது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 33 தேர்வு மையங்களில் 17 ஆயிரத்து 992 பேர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை உள்பட கடந்த ஆண்டு நீட் தேர்வின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளே பின்பற்றப்பட்டது. இதுதவிர தேர்வு அறைக்கு வரும் மாணவர்கள் தங்கள் கையில் ஹால்டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம் தவிர வேறு எதுவும் எடுத்து வரக்கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால், மாணவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த தேர்வர்கள் தனி அறையில் வைத்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *