

மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். எம்எல்எவாக இருந்தும் கடைசி வரை குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் 74 வயதான நன்மாறன் மூச்சுத் திணறல் காரணமாக இன்று காலமானார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தொடக்கத்தில் தொழிற்சங்கவாதியாக வாழ்க்கையைத் தொடங்கிய நன்மாறன், பின்னர் சிபிஎம் கட்சியில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார். மிகக் கடினமான கருத்துக்களையும் மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகவும், நகைச்சுவையோடும் விளக்குவதில் வல்லவர். அதனாலேயே ‘மேடைக் கலைவாணர்’ என்ற அடைமொழியிட்டு அழைக்கப்பட்டார். தமிழில் முதுகலை பயின்றவர். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மீது கொண்ட பற்றால் அவர்களின் வரலாறுகளை புத்தகமாக எழுதி இருக்கிறார். தமுஎகசவில் மதுரைக்கிளை உறுப்பினராகவும், மாநிலக் குழு, மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றி, மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.
எளிமையின் உருவமாய் வாழ்ந்து நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் நன்மாறன். பல்வேறு அரசியல் தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் இறுதி மரியாதையை செய்து வருகின்றனர்.
