• Sat. Apr 20th, 2024

பலத்த மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் மஸ்கட் நகரம்!..

Byமதி

Oct 4, 2021

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கி.மீ. தொலைவில் கடல் பகுதியில் ‘சகீன்’ புயல் நேற்று காலை மையம் கொண்டிருந்தது. இந்த புயல் காரணமாக 2 நாட்களுக்கு அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூடம், கல்லூரிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் கடற்கரைக்கு மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி அரசின் அறிவிப்பை பின்பற்றி பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

சகீன் புயல் நேற்றிரவு தெற்கு மற்றும் வடக்கு அல் பத்தினா பகுதியில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக பலத்த காற்று வீசியது. மேலும் ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிக கனமழை பெய்தது. இந்த பலத்த மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. இதனால் சில இடங்களில் வசித்து வந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

மழை காரணமாக மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கியது. இதனால் விமான சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விமானங்களும் மற்றொரு நாளுக்கு மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

மஸ்கட்டின் ருசைல் தொழிற்பேட்டை பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த வீட்டில் தங்கியிருந்த 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமீரத் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை ஒன்று பலியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தையை பாதுகாப்பு படையினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *