கோவை புதூர் அருகே அருள்மிகு பால விநாயகர் முருகன் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு குருக்கள் சென்று விடுவார்.
நேற்று முன்தினம் இரவும் பூஜை முடிந்த பிறகு கோவிலை பூட்டி விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை கோவில் குருக்கள் பணிகளை செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் கதவு திறந்து கிடந்தது.

அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகில் ஒரு வாலிபர் போதையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார்.
உடனே கோவில் குருக்கள் கோவில் நிர்வாகிக்கு தகவல் தெரிவித்தார். சம்பவம் குறித்து அறிந்ததும் கோவிலுக்கு பொதுமக்கள் படையெடுத்து விட்டனர். இதை அடுத்து குனியமுத்தூர் காவல் துறையினர் கோவிலுக்கு விரைந்து வந்தனர்.
கோவில் உண்டியல் அருகில் படுத்து தூங்கிய வாலிபரை எழுப்பி விசாரித்தனர்.
அப்போது அந்த வாலிபர் கோவிலுக்குள் கொள்ளை அடிக்க வந்த இடத்தில் பணத்தை திருடி விட்டு குடிபோதையில் உண்டியல் அருகிலேயே படுத்து தூங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது அவரது பெயர் சின்னையன் (வயது 42) காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. சின்னையன் மீது காரைக்கால் போலீஸில் திருட்டு வழக்குகள் உள்ளது.
இதனால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சின்னையன் கோவை புதூர் வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். அங்கு தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கோவை புதூரில் அழகு பால விநாயகர், முருகன், ஐயப்பன் கோயிலை பார்த்ததும் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு சின்னையன் கோவிலுக்குள் நுழைந்து உள்ளார்.
பிறகு அங்கு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் 8,250 திருடி உள்ளார்.
அதன் பிறகு கோவில் கருவறை கதவை இரும்பு கம்பி மூலம் உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த பொருட்களை திருடி உள்ளார்.
அப்போது மழை பெய்ய தொடங்கியது. இதனால் மழை நின்றதும் கோவிலை விட்டு செல்லலாம் என்று நினைத்து உண்டியல் அருகில் படுத்து தூங்கி உள்ளார். ஆனால் குடிபோதையில் இருந்ததால் அவரால் எழுந்து செல்ல முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை கோவில் குருக்கள் சென்ற போது தான் அவருக்கு அவர் சிக்கியது தெரிய வந்தது. இது குறித்து கோவில் நிர்வாகி வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சின்னையனை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
திரைப்பட பாணியில் கோவிலுக்குள் கொள்ளை அடிக்க வந்து விட்டு படுத்து தூங்கிய திருடன் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.