தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே பெய்த தொடர் மழையால் 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதமடைந்தால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர், சின்னஓவுலாபுரம் பகுதியில் உள்ள மரிக்காட்டு பகுதி, வலசைக் காட்டு பகுதி, சுண்ணாம்பு ஊத்து பகுதி மற்றும் அப்பையா கோவில் சாலை பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் செவ்வாழை, நேந்திரம், பச்சை வாழை உள்ளிட்ட பல்வேறுவாழைப் பயிர்களை சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வருடந்தோறும் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்ததில் விவசாயிகள் பத்து மாத காலத்திற்கு பின் அறுவடை செய்ய தயாராக இருந்த வாழை மரங்கள் குலையுடன் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி கண்ணீர் விடும் அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது.
வருடந்தோறும் மகிழ்ச்சியுடன் வாழை விவசாயத்தை செய்து வரும் விவசாயிகள் அறுவடை செய்ய காத்திருக்கும் நேரத்தில் தொடர்ந்து மூன்று வருடங்களாக ஏற்பட்ட மழைக்காலத்தின் அழிவால் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகளை கடனாளிகளாக மாற்றிவிடும் அவல நிலையால் வாழை விவசாயத்தை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளதாகவும் என்வே அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.