வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் வறண்ட மூலவைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும்
பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
தேனி மாவட்டம், வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், காந்திகிராமம், வாலிப்பாறை, வருசநாடு மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் நேற்று மாலை 4 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 6 மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்து கொண்டே இருந்தது. பலத்த மழையின் காரணமாக, கடந்த சில மாதங்களாக வறண்ட நிலையில் காணப்பட்ட ஆறு ,நள்ளிரவில் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது-. கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளதால் வருசநாடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை .தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 68.54 ஆக உள்ளது (மொத்த உயரம் 71 அடி). ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் முழு கொள்ளளவை வைகை அணை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.