கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்றம் பரிந்துைரயின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை கூடுதல்தலைமைச் செயலர் சந்தீப்சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், கேரள அரசு சார்பில் நீர்பாசனத்துறை கூடுதல் செயலர் ஜோஸ், நீர்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்க்கீஸ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த குழு இன்று முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மெயின்அணை, பேபி அணை ஷட்டர் பகுதிகள், நீர் கசிவு, கேலரி ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மேலும் மாலையில் குமுளியில் உள்ள கண்காணிப்பு அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த குழுவிற்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளது.
பேபி அணை பகுதியில் இடையூறாக உள்ள மரங்களை வெட்டிய பின் அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வல்லக்கடவு பாதையை சீரமைக்க வேண்டும் ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்பதால் ஆய்வு அறிக்கையை விவசாயிகள் ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளனர்.