• Sat. Apr 26th, 2025

தமிழர்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ByP.Kavitha Kumar

Mar 25, 2025

எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல தமிழர்கள். இந்த இருமொழிகளே போதும் என்றுதான் சொல்கிறோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “மும்மொழிக் கொள்கையில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மற்றும் உணர்வு என்ன என்பதை பாஜக தவிர அனைத்துக் கட்சியினரும் உணர்த்தி காட்டியுள்ளனர். டெல்லிக்கு சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி மும்மொழிக் கொள்கையின் நிலைப்பாடு குறித்து எடுத்துக் கூறவேண்டும். தமிழும், ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. இருமொழிக் கொள்கை மட்டுமல்ல, நமது வழிக்கொள்கையும் அதுதான். என் விழிக்கொள்கையும் அதுதான்.

இந்தியை ஏற்காவிட்டால் நிதி தரமாட்டோம் என மிரட்டினாலும், பணமே வேண்டாம் தாய்மொழி காப்போம் என்ற உறுதியை கைவிட மாட்டோம்.
இது பணப்பிரச்சினை இல்லை. இனப்பிரச்சினை. நம் தமிழை, தமிழினத்தை, தமிழ்நாட்டு மாணவர்களை, இளைய சமூகத்தை காக்க வேண்டிய பிரச்சினை. இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகள் இல்லை நாங்கள். அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது இருமொழிக் கொள்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசின் இந்தி திணிப்பு திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை ஏற்க மறுக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையே செயல்பாட்டில் இருக்கும். இது கொள்கை அல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம். தாய் நிலத்திற்கு தமிழும், உலக தொடர்புக்கு ஆங்கிலம் என்றும் அண்ணா வடித்த சட்டம்.

இந்த இருமொழிக் கொள்கைதான் அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை வளர்த்து வருகிறது. எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல தமிழர்கள். இந்த இருமொழிகளே போதும் என்றுதான் சொல்கிறோம். யாரும் எந்த மொழியையும் கற்பதற்கு தடையாக இருப்பவர்கள் அல்ல நாம். அதேநேரத்தில் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும், அதை அனுமதிப்பதில்லை என்பதைத்தான் இருமொழிக் கொள்கையாக கடைபிடிக்கிறோம்.

இந்தியாவின் கூட்டாட்சி தன்மையை காக்கவும், மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும், மிக சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்திலே நாம் இருக்கிறோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியைக் காக்க முடியும், தமிழினத்தை உயர்த்த முடியும் என்பதை உறுதிபட தெரிவித்து அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்” என்றார்.