
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமான மூலமாக டெல்லி செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கான நிதியை பெறுவது குறித்து வலியுறுத்தி பேச திட்டமிட்டுள்ளார்.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். பிரதமர் மோடி தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்படும்.
இந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். அந்த வகையில், நிதி ஆயோக்கின் இந்த ஆண்டுக்கான (2025) கூட்டம் நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு டெல்லியில் நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம் முறையாக மத்திய அரசு சார்பில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு பங்கேற்கிறார். இதற்காக அவர் தற்போது சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிற்பகல் டெல்லி சென்றடையும் முதல்வரை, தமிழக எம்பிக்கள் வரவேற்கிறார்கள். பின்னர் இன்று டெல்லியில் சில முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று இரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதல்வர், நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அப்போது, தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க பிரதமரிடம் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.
