• Thu. Apr 25th, 2024

முகலிவாக்கம் பகுதியில் 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் – அமைச்சர்கள் வழங்கினர்

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் பகுதியில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் காரணமாக திருவள்ளுவர் நகர், ஆறுமுகம் நகர், தர்மராஜபுரம், சி.ஆர்.ஆர்.புரம் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரினை அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகளின் மூலம் வெளியேற்றும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, தேங்கியுள்ள நீரினை துரிதமாக வெளியேற்ற அதிகாரிகளை அறிவுறுத்தினர். மேலும், திருவள்ளுவர் நகர், ஆறுமுகம் நகர், தர்மராஜபுரம், சி.ஆர்.ஆர்.புரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம்களையும் அமைச்சர்கள் 3 பேரும் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, மணப்பாக்கம்- கிரகம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள தர்மராஜபுரம் கால்வாயில் ரொபோடிக் எக்ஸ்கவேட்டர் எந்திரங்களை கொண்டு திடக்கழிவுகளை அகற்றுதல் மற்றும் கால்வாய்களை அகலப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டனர்.
பின்னர், திருவள்ளுவர் நகர் மற்றும் ஆறுமுகம் நகர் பகுதிகளில் உள்ள 500 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் வழங்கினர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:- போரூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரானது 3 கால்வாய்களின் வழியே வெளியேறி வருகிறது. இந்தக் கால்வாய்களில் போதிய கொள்ளளவு இல்லாத காரணத்தினால் அதிகப்படியான நீர் முகலிவாக்கம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தேங்கியது. இதற்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் நீர்வளத்துறையின் சார்பில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் பெரு வடிகால்வாய் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 50 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளது. மதனந்தபுரம் பகுதியில் கால்வாய் அமைக்கப்பட்டுவிட்டால் அடுத்த வருடம் இங்கு நீர்த்தேக்கம் ஏற்படாது. இந்த பருவமழையினால் ஏற்படும் நீர்த்தேக்கத்தை சீர்செய்ய மாநகராட்சியின் சார்பில் தேவையான அளவிற்கு அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு, இப்பகுதியில் தேங்கிய நீரானது உடனடியாக வெளியேற்றப்படும். தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சென்னையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளின் காரணமாகவே இந்த ஆண்டு பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *