• Thu. Apr 25th, 2024

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்.
2003-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி டிசம்பர் 22-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்கிறார். தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் மொத்தம் 30 படங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றிலிருந்து, ஆதார், இரவின் நிழல், இறுதிப் பக்கம், மாமனிதன், கார்கி, கசட தபற, நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்து சிறந்த படம், சிறந்த இரண்டாவது படம், நடுவர்கள் சிறப்பு விருது, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த ஒலிப்பதிவாளர் ஆகிய 8 விருதுகளுடன் திரையுலகில் சிறந்து விளங்கிவரும் ஒருவருக்கு அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது உட்பட மொத்தம் 9 விருதுகள் வழங்கப்பட உள்ளன. சென்னை சத்யம் சினிமா வளாகத்தில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் உட்பட மொத்தம் 5 திரையரங்குகளில் 4 காட்சிகள் வீதம், ஒவ்வொரு நாளும் 20 படங்கள் திரையிடப்படவுள்ளன. கூடுதல் விவரங்களை https://chennaifilmfest.com/ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *