போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மை பாரத் (MY Bharat) மற்றும் தேசிய சேவைத் திட்டம் (NSS) சார்பில், ‘நஷா முக்த் யுவா விக்சித் பாரத்’ மாவட்ட அளவிலான போட்டிகள் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றன.

இந்தப் போட்டிகள் மாவட்ட இளையோர் அலுவலர் முனைவர் எம். ராம்சந்திரன் மேற்பார்வையில் நடைபெற்றன. இதில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

போதைப்பொருளின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, சுலோகப் போட்டி, குழு நடனப் போட்டி, தெருநாடகப் போட்டி, ரீல் உருவாக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக நடுவர்கள் நியமிக்கப்பட்டு, போட்டியாளர்களின் திறமை, படைப்பாற்றல் மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட இளையோர் அலுவலர் முனைவர் எம். ராம்சந்திரன், இளைஞர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதுமே இந்தப் போட்டிகளின் முக்கிய நோக்கம் என்றார்.
மேலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இளைஞர்கள் சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




