• Thu. Apr 24th, 2025

மே 31-ம் தேதிக்குள் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ByP.Kavitha Kumar

Mar 18, 2025

வரும் மே 31-ம் தேதிக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26-ம் நிதியாண்டில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ 3500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில்,” கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓலைக் குடிசைகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்கள் குறித்து கருணையினையும், குடிசையில்லா தமிழ்நாடு அமைந்திட வேண்டும் என்ற அவரது பெருங்கனவையும் நினைவுகூறும் வகையில், கடந்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வரும் 2030-ம் ஆண்டிற்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் நோக்கத்துடன், சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிகள், அனைத்து மாவட்டங்களிலும் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பட்ஜெட் மீதான இரண்டாம் நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு பேசுகையில், “கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட குறைவான நிதிதான் செலவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “நீங்கள் பசுமை வீடு திட்டத்தை அறிவித்தீர்கள். முழுமையாக செயல்படுத்தவில்லை. வரும் மே மாதம் 31-ம் தேதிக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ” முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 5 ஆண்டுகளில் 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டது” என்று தெரிவித்தார்