

முல்லைப் பெரியாறு அணையை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சர் காரை முற்றுகையிட முயற்சி நடந்தது.
கடந்த 29-ம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணையில் மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த சூழ்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, சக்ரபாணி உள்ளிட்டோர் உடன் சென்றனர். முல்லைப் பெரியாறு அணை தமிழக கட்டுப்பாட்டில் இருப்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
முன்னதாக கம்பம் கூடலூர் நெடுஞ்சாலையில் 5 மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமையில் 50க்கும் மேலான விவசாயிகள் அமைச்சரை முற்றுகையிடப் போவதாக உத்தமபாளையம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தாவிற்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு விவசாயிகளிடம் கலைந்து செல்லுங்கள், மறியல் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதற்கு விவசாயிகள் அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க போவதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் அமைச்சர் வந்த காரை விவசாயிகள் சங்கத் தலைவர் தலைமையில் மறித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவில், பெரியாறு அணைக்கு வரும் நீர் வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும், பெரியாறு அணையில் தமிழக போலீசார் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும், அணை நிர்வாகம் தேனி மாவட்ட கலெக்டர் பொறுப்பில் வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணைக்குச் செல்லும் தமிழக அதிகாரிகளை கெடுபிடி செய்யாமல் வல்லக்கடவு வழியாக அனுப்ப வேண்டும். நீண்ட காலம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் தமிழன்னை படகிற்கு கேரள அரசிடம் அனுமதி பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். மனுவை பெற்றுகொண்ட அமைச்சர் பரிசீலனை செய்வதாக கூறினார்.
