

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இளைய தலைமுறையினரிடம் ராணுவ கட்டுக்கோப்பு வளர வேண்டும் என்ற நோக்கத்துடன், ராணுவ வீரரான பேடன் பவல் என்பவர் 1907-ம் ஆண்டு சாரணர் இயக்கம் என்ற இயக்கத்தை இங்கிலாந்தில் உருவாக்கினார்.
இந்த இயக்கத்தின் செயல்பாடாக, 1908-ம் ஆண்டு ஜனவரி 24-ல் ஆண்கள் சாரணர் குழுவை அவர் உருவாக்கினார். ‘பாய் ஸ்கவுட்ஸ்’ என்று அழைக்கப்பட்ட இதுவே முதல் சாரணர் படையாகும். உலக அளவிலான இளைஞர் இயக்கங்களில் ஒன்றாகவும், உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் சாரணர் இயக்கம் திகழ்கிறது.
இந்த இயக்கம் அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியது. 1909-ல் இந்தியா மற்றும் சிலி நாட்டிலும், 1910-ல் அமெரிக்காவிலும் சாரணர் குழு உருவானது. 10 ஆண்டுகளுக்குள்ளாகவே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இந்த இயக்கம் விரிவடைந்து விட்டது.நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை சிறுவர்களிடத்தில் வளர்த்து, அவர்களை சிறந்த குடிமக்களாக உயர்த்துவதே சாரணர் இயக்கத்தின் நோக்கமாகும்.
இந்த நிலையில், தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் சாரண, சாரணியர் இயக்க மாநில முதன்மை ஆணையராக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
