• Sun. Apr 2nd, 2023

மேட்டுப்பாளையம் நகர ஆட்சி……பந்தயத்தில் முந்துவது யார்? ஸ்கேன் ரிபோர்ட்

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே மேட்டுப்பாளையம், பொள்ளாட்சி, வால்பாறை ஆகிய மூன்று நகராட்சிகள் மட்டுமே இருந்த நிலையில், எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், புதிதாக காரமடை, மதுக்கரை, கூடலூர், கருமத்தம்பட்டி ஆகிய நான்கு நகராட்சிகள், உதயமாகியுள்ளது. இந்நிலையில் ஏழு நகராட்சிகள் இம்முறை தேர்தல் களத்தில் உள்ளது.

இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த முறை பா.ஜ.க., தனித்து நின்று வெற்றி பெற்று நகராட்சி தலைவராக சதீஷ்குமார் பொறுப்பேற்றார்.அதற்கு காரணம் தலைவர் பதவி நேரடி தேர்தல் நடந்ததுதான். மேட்டுப்பாளையம் நகராட்சியை பொறுத்தமட்டில், சுமார் 60,000 வாக்காளர்கள் உள்ள நிலையில், 50,000 வாக்குகள் பதிவாகி விடும்.

இதில் சிறு பான்மையினரான இஸ்லாமியர்களின் வாக்குகள் மட்டும் 22,000 உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர ஒக்கலிகவுண்டர், செட்டியார், கவுண்டர், அருந்ததியர், முதலியார், தேவேந்திரகுல வேளாளர் என பல்வேறு சமூக மக்கள் இருந்தாலும், பெரும்பான்மையாக இஸ்லாமியர்களே உள்ளனர்.

இதனால் அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமிய வேட்பாளர்களையே தேர்தல் களத்தில் இறக்குவார்கள்.

தி.மு.க.,வை பொருத்தவரை மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவராக ரஜாக், மாதையன் ஆகிய இருவர் பொறுப்பு வகித்துள்ளனர். இந்நிலையில் இம்முறை எப்படியேனும் மேட்டுப்பாளையம் நகராட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்கிற முனைப்போடு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமாக இறங்கியுள்ளார்.

முன்னதாக கரூர் டீம் பத்து பேர் இங்கு தங்கி பூத் கமிட்டி அமைத்து பட்டுவடாவும் முடிந்து விட்டது.இந்நிலையில் தி.மு.க., தரப்பில் வழக்கறிஞரும், வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான அஸ்ரப் அலியின் பெயர் பேசப்படுகிறது. காரணம் இவர் மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி, நீலகிரி எம்.பி., ஆ.ராசா ஆகியோருடன் மிகவும் இணக்கமாக பயணித்து வருபவர். இவர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாத நிலையில், முதல் முறையாக நகர்மன்ற தலைவராக வாய்ப்பு கேட்கிறார்.

இதற்கெல்லாம் ஹைலைட்டான விஷயமாக பார்த்தால், கட்சியினரின் வழக்குகளுக்கு இலவசமாக ஆஜராகி வருவதால், அவருக்கான செல்வாக்கு தனித்துவமாக தெரிகிறது.

மேலும் தி.மு.க., தரப்பில் தெற்கு நகர செயலாளரும், வழக்கறிஞருமான முனுசாமி, இவர் மேட்டுப்பாளையத்தில் மிகவும் பரிச்சயமானவர். வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பிரபலமானவர். மேலும் கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முகம்மது யூனுஸ், தி.மு.க., வில் முக்கியப் புள்ளி பேச்சாளர் இவருக்கென தி.மு.க.,வில் தனி இமேஜ் உள்ளது. இவர்கள் தலைவர் பதவிக்கு ரேஸ்ஸில் உள்ளனர்.

அ.தி.மு.க., தரப்பில் கடந்த முறை போட்டியிட்ட மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் இம்முறையும் வாய்ப்பு கேட்டுள்ளார். அ.தி.மு.க.,வில் பல ஆளுமைகளை உருவாக்கியவர் கிங் மேக்கர் என்றழைக்கபடுகிறார்.அவர் மட்டுமல்ல நகர செயலாளர் வான்மதி சேட், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரமா செல்வி ஆகியோரும் போட்டியிட சீட்டு கேட்டுள்ளனர்.

மேலும் பா.ஜ.க., தரப்பில் முன்னாள் தலைவர் சதீஷ்குமார் இம்முறையும் வாய்ப்பு கேட்டுள்ளார். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.க., இருப்பதால், இரு கட்சிகளில் யாருக்கு வாய்ப்பு என அடுத்தடுத்த நகர்வுகளில் தான் தெரிய வரும். பா.ஜ.க., அதிக வார்டுகளில் போட்டியிட வாய்ப்புள்ளது.

இதெல்லாம் ஒரு புறமிறமிருக்க மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு என்பது உறுதி செய்யபடும் பட்சத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் மனைவிகள் போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.

முனுசாமி
நாசர்

யூனுஸ்

அஸ்ரப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *