
தமிழ்நாட்டில் நடைபெறும் அகழாய்வில் முதல் முறையாக வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கிடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் தொன்மையான மனிதர்களின் ஐந்து ஆயிரம் ஆண்டுகள் நுண்கற்காலத்தை அறியும் வகையில் தொடர்ச்சியாக மூன்றாம் கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட அகழாய்வில் இதுவரை தங்க ஆபரணங்கள், சூது பவள மணி, காளை உருவ பொம்மை, சங்கு வளையல்கள், செப்பு காசுகள், சுடுமண் முத்திரை, உள்ளிட்ட 10 அயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது 24.9 செ.மீ நீளமும், 12.6 செ.மீ விட்டமும், 6.68 கிராம் எடை கொண்ட சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வில் முதல் முறையாகக் கிடைக்கப்பெற்ற பதக்கம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பு என “வெம்பக்கோட்டை எனும் விசித்திரக்கோட்டை” என பெருமிதத்தோடு அமைச்சர் தங்கம் தென்னரசு தனது “எக்ஸ்” பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டக்காய் ஒன்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவை 27.7மி.மீ உயரமும், 25.5 மி.மீ விட்டமும் கொண்டதாகவும், இந்த ஆட்டக்காயின் வடிவம் ஒருபுறம் விலங்கின் தலைப்பகுதியும், மறுபுறம் பறவையின் தலைப்பகுதியும் கொண்டதாக இருப்பது வியப்பளிக்கிறது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
