• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சர்ச்சை கலெக்டர் மகாபாரதி அதிரடியாக மாற்றம்- தமிழக அரசு உத்தரவு

ByP.Kavitha Kumar

Mar 1, 2025

சிறுமி பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்ளான விவ​காரம் தொடர்பாக சர்ச்சை கருத்தை வெளிப்படுத்திய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மயிலாடு​துறை மாவட்டம் சீர்​காழி அருகே​யுள்ள அரசூர் பகுதி​யில் உள்ள அங்கன்வாடி​யில் பயின்று வரும் மூன்றரை வயது சிறுமி கடந்த 24-ம் தேதி உணவு இடைவேளை​யின்​போது காணாமல் போனார். அவரை ஆசிரியை மற்றும் உதவி​யாளர் அருகில் உள்ள பகுதி​களில் தேடி​யுள்​ளனர். அப்போது அங்கன்​வாடிக்கு அருகே உள்ள சந்து பகுதியி​ல் தலை மற்றும் முகத்​தில் கற்களால் தாக்​கப்​பட்ட நிலை​யில், சிறுமி பலத்த ​காயங்களுடன் உயிருக்​குப் போராடியபடி கிடந்​துள்ளார். தகவலறிந்து வந்த கொள்​ளிடம் போலீசார், சிறுமியை மீட்டு, சிகிச்​சைக்காக மருத்​துவ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தற்போது அந்த சிறுமிக்கு புதுச்​சேரி ஜிப்மர் மருத்​துவ​மனையில் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது. இது தொடர்பாக சீர்​காழி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் போக்சோ சட்டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதே பகுதி​யைச் சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்​தனர்.

இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசிய போது, “கடந்த வாரம் நடந்த மூன்றரை வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், குழந்தையே தவறாக நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த தகவலின்படி காலையில் அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளது. அதுதான் காரணம். எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்களை பெற்றோர் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்” எனக் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் இந்த பேச்சு ஊடங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெகுமாக பரவியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்புகள் ஆட்சியரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை கண்டித்து மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்​பில் இன்று (மார்ச் 1) ஆட்சியர் அலுவல​கத்தை முற்றுகை​யிடும் போராட்டம் நடத்​தப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டிருந்​தது.

இந்த நிலை​யில், மயிலாடு​துறை ஆட்சியர் மகா​பார​தியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நா.முரு​கானந்தம் உத்தர​விட்​டுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறி​விப்​பில்​, “மயி​லாடு​துறை ​மாவட்ட ஆட்​சி​யராக இருந்த ஏ.பி.ம​கா​பார​திக்​குப் ப​திலாக, ஈரோடு மாநக​ராட்சி ஆணை​யர் எச்​.எஸ்​.​காந்த் நியமிக்​கப்​படு​கிறார்” எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மூன்றரை வயது சிறுமி, சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியதுதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என பேசிய மகாபாரதி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.